×

தேனாம்பேட்டையில் செயல்படும் அஞ்சலகம் மூடப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை மண்டல அஞ்சல் துறையின் கீழ், சென்னை நகர கோட்டம், மத்திய கோட்டம், தெற்கு கோட்டம், மேற்கு கோட்டம் ஆகிய கோட்டங்கள் உள்ளன. சென்னை மத்திய கோட்டத்தில் செயல்படும் தேனாம்பேட்டை மேற்கு அஞ்சலகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பல்வேறு அஞ்சல் கணக்குகளை பராமரித்து வருகின்றனர். அஞ்சல் மற்றும் பார்சல் அனுப்ப தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த அஞ்சலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த அஞ்சலகத்தில் போதிய பண பரிவர்த்தனை நடைபெறவில்லை என்றுக்கூறி, வரும் 28ம் தேதி முதல் இதனை மூட அஞ்சல்துறை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,  தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகிய 3 சங்கங்களை  சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது: தேனாம்பேட்டை மேற்கு அஞ்சலகத்தை வரும் 28ம் தேதி முதல் மூடுவதற்கு அஞ்சல் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. வாடகை பிரச்னை இருந்தால் மட்டுமே அஞ்சலகத்தை மூடலாம். ஆனால், அதுபோன்ற எந்த பிரச்னையும் இந்த அஞ்சலகத்திற்கு கிடையாது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலகத்தை பயன்படுத்துகின்றனர். பணப் பரிவர்த்தனை குறைவு என்ற காரணத்தை காண்பித்து அஞ்சலகம் மூட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அருகே உள்ள ஏ.ஜி.எஸ் அஞ்சல் அலுவலகத்துடன் இதை இணைத்து செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கணக்குகளை மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாள்தோறும் 300 வரையிலான விரைவு அஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. அஞ்சலகத்தை மூடுவதன் மூலம் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாவார்கள். முக்கியமான அஞ்சலகமாக திகழும் இதை மூட முடிவெடுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

சமீபத்தில் பெரம்பூர் வடக்கு கோட்டத்தில் ஒரு அஞ்சலகமும், தெற்கு கோட்டத்தில் ஒரு அஞ்சலகமும் மூடப்பட்டுள்ளன. இதை தொடந்து தேனாம்பேட்டை மேற்கு அஞ்சலகமும் மூடப்பட உள்ளது. இந்த நடவடிக்கையை அஞ்சல் துறை கைவிட வேண்டும். பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ெதாடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு அஞ்சலகத்தின் முன்பாக போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : Demonstration ,closure ,post office ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு